565. ஒரு சந்தோஷமும், ஒரு துக்கமும்!
கௌசல்யா: நேற்று கௌசல்யாவையும் பானுபிரியாவையும் வீட்டிற்கு அழைத்திருந்தேன். எப்போதும் போல, கௌசல்யாவை நேரில் சந்திக்கும்போதெல்லாம் பெய்யும் மழை, நேற்றும் விடவில்லை!
பானுபிரியா திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் பொறியியல் (நுண்ணணுவியல்) முதலாண்டு முடித்து விட்டார். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நானிட்ட வேண்டுகோள் இடுகையை வாசித்து பெரிய அளவில் ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றிகள்.
கௌசல்யா தற்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன்சி பயின்று வருகிறார். இன்னும் சில மாதங்களில் முழு வைத்தியர் ஆகி விடுவார்! இந்த 5 ஆண்டு கல்லூரி/விடுதி வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், கலகலப்பும், தைரியமும் கூடி இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவத்தில் மேல்நிலைக் கல்வி பயிலப் போவதாகக் கூறினார். முடிந்த உதவி செய்வதாக கூறியிருக்கிறேன்.
மற்றொரு முக்கியமான விஷயம். கௌசல்யாவுக்கு இப்போது மாதம் 7000 ரூ அரசு உதவித் தொகை (stipend) கிட்டுவதால், தன் செலவை தானே பார்த்துக் கொள்ள முடிவதாகக் கூறினார். அதோடு, தனது முதல் மாத உதவித் தொகையிலிருந்து, என்னை மிகவும் வற்புறுத்தி, எங்களது கல்வி உதவிச் சேவைக்கு தனது பங்காக ரூ 2500-ஐ வழங்கிய செயல் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது! கௌசல்யா டாக்டர் ஆனதை விட, இப்படி நல்ல மனுஷியாக பரிமளிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது! அவரது கல்விக்கு உதவிய / அவளை வாழ்த்திய நல்ல நண்பர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.
*******************************
அந்தோணி முத்து: இன்று காலை, என்னை சகோதரனாக பாவித்த, எனது இனிய நண்பர் அந்தோணி முத்துவின் திடீர் மறைவு என்னை உலுக்கி விட்டது! அவர் கடந்த ஒரு வாரமாக ஆஸ்துமா பிரச்சினையால் மருத்துவமனையில் இருந்தாலும், முன்பு ஒரு முறை சுகமடைந்து வீடு திரும்பியது போல, இப்போதும் உடல் நலம் தேறி வீடு திரும்பி விடுவார் என்று தான் எண்ணியிருந்தேன்.
இம்முறை வீடு திரும்பவில்லை :-( நாமொன்று நினைக்க, தெய்வமொன்று நினைக்கிறது! தான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அடுத்தவர் உணராத வண்ணம் இயல்பாக நடந்து கொள்பவர் அந்தோணி! அதனால், அவருடன் சகஜமாக உரையாட முடிந்தது.
25 ஆண்டுகளுக்கு மேல் சக்கர நாற்காலியிலும், படுக்கையிலும் தன் வாழ்க்கையை செலவழித்தவரிடம், சில சமயங்களில், என் (காலணா பெறாத!) உடல் நலப் பிரச்சினைகளைக் கூட இயல்பாக பேச முடிந்ததை இப்போது எண்ணிப் பார்க்கையில் மனது கனக்கிறது!
ஒரு இரண்டரை ஆண்டுகளாகத் தான் எனக்கு அந்தோணியைத் தெரியும். இந்த குறுகிய காலத்தில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, மனஉறுதி, யாரிடமும் உதவி கோரத் தயங்கும் இயல்பு, வெப் டிசைன் விஷயங்களை கற்பதில் காட்டிய உற்சாக ஆர்வம், நன்றி பாராட்டும் குணம் போன்றவற்றால் என்னை ஆச்சரியப்படுத்திய, ஏன் எடுத்துக்காட்டாகக் கூட இருந்த ஓர் அசாதாரணமான நண்பராக இருந்தார்! அந்தோணி முத்துவின் நட்பு எனக்கு பல நேர்மறை விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது!
அந்தோணியின் ஆன்மா சாந்தியடைய அந்த வைகுண்ட நாதனை வேண்டிக் கொள்கிறேன்!
எ.அ.பாலா